பக்கங்கள்

திங்கள், 4 ஜனவரி, 2010

ஆரோக்கிய அழகுக் கலை முறைகள்

அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!

உடலின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் பல்வேறுவகையான வைட்டமின் சத்துகள் போதிய அளவில் தேவைப்படுகின்றன. சரிவிகித உணவு சாப்பிடும்போது உடலின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஜீரண உறுப்புகளும் சரிவர இயங்குகின்றன. வாய் ருசிக்காக நாம் சாப்பிடும் பல்வேறு உணவு வகைகள், நமது குடல்வாய்ப் பகுதிகளைப் புண்ணாக்குவதோடு அஜீரணத்தையும் ஏற்படுத்துகின்றன. நாம் அளவு குறைவாகச் சாப்பிட்டாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் உடல் பாதிக்கப்படுவது நிச்சயம்.

வாய், வயிறு, லிவர், பான்கிரியாஸ் போன்ற உறுப்புகளில் உணவு ஜீரணமாகும் வேலை நடைபெறுகிறது. நன்கு மென்று விழுங்கப்படும் உணவுக் எளிதில் ஜீரணமாகின்றது.

ஒரு மனிதரின் வாழ்வில் நெருப்பைப் போன்றது கோபம். ஒருவன் கோபப்படும்போது அவன் முகம் சிவக்கிறது. நரம்புகள் இறுகி, உடல் வெப்பமும், இரத்த ஓட்டமும், இருதயத் துடிப்பும் அதிகரிக்கின்றன. இம்மாதிரி கோபப்படுவதும்கூட அஜீரணம் உண்டாக வழிவகை செய்யும்.

கோபம், பயம், பொறாமை ஆகியன ஏற்படும்போது அஜீரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அஜீரணம் உண்டாகும்போது நமக்கு நாமே சரியாக இல்லாதது போன்ற ஒரு மனநிலை, தடுமாற்றம், எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு அசாதரணமான நிலைக்கு ஆளாகிறோம்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், நம் ஜீரண உறுப்புகளுக்கு அதிகம் தொந்தரவு தராத உடலுக்கு ஏற்ற சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். உடலின் வெளித்தோற்றம் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தால் போதாது; உடலின் உள்ளுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் நோயற்று ஆரோக்கியமாக வாழ முடியும். அது நம் கையில்தான் இருக்கிறது.

வயிறு குறையச் சில பயிற்சிகள்

ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் உடலில் சதை மிகுதியாய் இருக்கக் கூடிய முக்கியமான இடம், வயிறுதான், வயிறு பருத்துவிடப் பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று, பரம்பரையாக ஏற்படும் தொந்தி, இதன் மூலம் தொப்பை எனும் குறை உண்டாகலாம்.

வாயுத் தொல்லை காரணமாய்ச் சிலருக்கு வயிறு உப்பியிருக்கலாம்.

உடலுக்குப் பயிற்சிகள் ஏதும் தராமல் காரில் பயணம் செய்பவர்கள், உடலை வருத்தி வேலை செய்யாமல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே காலத்தைக் கழிப்பவர்கள், அதிகமாக ஓய்வு எடுப்பவர்கள் ஆகியோருக்கு வயிறு பருத்திருக்கலாம்.

நான்காவதாக, மது, மாமிசம், அதிகமாகச் சாப்பிடுவதாலும் வயிறு பெருக்கும்.

ஐந்தாவதாக, பிரசவம் ஆனபின் பெண்களுக்கு வயிறு பருத்துவிட வாயப்பிருக்கிறது.

கைகால்கள் அழகாய் அமைந்துவிட்டு வயிறு மடடும் பருத்திருப்பது அழகாகவா இருக்கும்? மேலைநாடுகளில் இம்மாதிரி உடல்நலத்தில் ஆர்வம் காட்டாதவர்களைப் பார்ப்பது அரிது. இப்படி அதிகப்படியான சதைகளை வயிற்றிலிருந்து அகற்ற என்ன செய்யலாம்?

இப்போது ‘லிப்போ சக்ஷன்’ எனும் காஸ்மடிக் சர்ஜரி மூலம் வயிற்றிலிருக்கும் அதிகப்படியான சதைகளை எடுத்துவிடுகிறார்கள்.

இது அனைவருக்கும் சாத்தியமா?

பணம் படைத்தவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயற்கை வைத்தியம் என்ற முறையில் அருகம்புல் சாறு, பூசணி, வாழைத்தண்டுச் சாறு ஆகியவற்றின் மூலமும் களிமண் குளியல், இடுப்புக் குளியல், முதுகுத்தண்டுக் குளியல் ஆகியவற்றின் மூலமும் எடை குறையச் சிகிச்சை கொடுக்கிறார்கள்.

யோகாப்பியாசம் செய்தல் மூலமும், உடற்பயிற்சிக் கருவிகளை உபயோகித்தல் மூலமும்கூட நீங்கள் உடலிலுள்ள அதிகப்படியான சதையைக் குறைக்கலாம்.

ஆக, இந்த எல்லா முறைகளினாலும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாயப்பிருக்கிறது. அது நீடித்திருக்க வேண்டுமே? எந்த ஒரு சிகிச்சை முறையும் முடிந்தபின், மீண்டும் அந்தச் சதை நம் உடலில் சேராதவறு பார்த்துக் கொள்ளுதல் நமது கடமையல்லவா?

வயிறு குறைய வீட்டிலிருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளலாம்.

அழகுக்கூடும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக