பக்கங்கள்

சனி, 17 ஜூலை, 2010

பிறக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்பது ஆணிலேதான் தங்கியுள்ளது

இன்றும் பெண் குழந்தைகளைப் எடுத்தாலே பெண்களை குறை சொல்லும் மூட நம்பிக்கை இன்னும் நம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் ஒரு குழந்தை உருவாகும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

மனித உடலின் இயல்புகள் அனைத்தும் ஜீன் (gene) எனப்படும் பரம்பரை அலகுகளாலே தீர்மானிக்கப் படுகின்றன. இந்த ஜீன்கள் நிறமூர்த்தம்(chromosome) எனப்படும் அமைப்பிலே சேர்ந்து கலங்களின்(cell) கருவினுள்ளே இருக்கும்.

மனிதனில் மொத்தமாக 46 (23 சோடி ) நிறமூர்த்தங்கள் இருக்கும். இந்த நிறமூர்த்தங்களில் இருக்கும் ஜீன்களே ஒரு மனிதனின் இயல்புகளை தீர்மானிக்கும். அதாவது ஒருவரின் உயரம், நிறம், பால் போன்ற அனைத்து இயல்புகளும் இந்த ஜீன்களிலே ஏற்கனவே பதியப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு இயல்பையும் தீர்மானிக்கும் ஜீன்கள் சோடியாகவே காணப்படும்.

குழந்தை உருவாக்கம் நடைபெறுவது ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கருக்கட்டுவதால் என்று விளக்கமாக முந்திய இடுகைகளிலே பதிவிடிருந்தேன்.

மற்றைய மனிதனின் கலங்கள் போல் ஜீன்கள் சோடியாக இல்லாமல் தனியாகவே இந்த விந்து மற்றும் முட்டைக் காலங்களிலே இருக்கும். தனியாக இருக்கும் இந்த ஜீன்கள் விந்தும் முட்டையும் கருக்கட்டும் போது மீண்டும் சோடியாகி ஒரு மனிதனை உருவாக்கும்.

மனிதனின் பால் இயல்புகளை தீர்மானிக்கும் ஜீனானது XX அல்லது XY என்ற சோடிகளாக இருக்கலாம்.

அதாவது ஒருவரின் ஜீன் அமைப்பு XY என்றால் அது ஆண் குழந்தையாக உருவாகும் ஜீன் அமைப்பு XX என்றால் அது பெண் குழந்தையாக உருவாகும்.

அதாவது பெண்ணிலே இருக்கும் ஜீன் அமைப்பு XX ஆகவே ஒரு முட்டை உருவாகும் போது இந்த XX என்ற ஜீன் சோடி பிரிந்து முட்டையிலே X என்ற ஒரு ஜீனே இருக்கும்.

ஆனால் ஆண்களில் உள்ள XY என்ற ஜீன் சோடி பிரியும் போது அரைவாசி விந்துகள் X என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும் மற்றையவை Y என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும்.

இனி கருக் கட்டலின் போது பெண்ணின் முட்டையிலே உள்ள X ஜீனோடு ஆணின் X ஜீனைக் கொண்ட விந்து கருக்கட்டுமானால் உருவாகும் குழந்தை ,முட்டையின் X மற்றும் விந்தின் X என்ற ஜீன்கள் ஒன்று சேர்வதால் XX என்ற அமைப்பைப் பெற்று பெண் குழந்தையாக மாறும்.

மாறாக ஆணின் Y என்ற ஜீனைக் கொண்ட விந்துகள் முட்டையோடு கருக்கட்டினால் குழந்தை XY என்ற ஜீன் சோடியைப் பெற்று ஆணாக உருவாகும்.

ஆக குழந்தை ஆணாக உருவாகுவதா அல்லது பெண்ணாக உருவாகுவதா என்பது
அப்பாவின் விந்தில் X ஜீனைக் கொண்ட விந்தா அல்லது Y ஜீனைக் கொண்ட விந்த கருக்கட்டுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
இதற்கு பெண் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டாள்.

இனியாவது பெண் குழந்தை பெற்று விட்டாள் என்று பெண்களை திட்டாதீர்கள். அப்படியும் திட்ட வேண்டுமென்றால் ஆண்களைத் திட்டுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக