பக்கங்கள்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு...

"உங்கள் அன்புக் குழந்தைகளின் பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க பத்திய உணவு தேவையில்லை தாய்மார்களே! பக்குவமான, முழுமையான சத்துணவு போதும். பரீட்சையை ஊதித் தள்ளிவிடுவார்கள்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
ஆரோக்கிய டிப்ஸ்:
மூளைதான் நமது உடலின் இயக்கங்கள், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. பரீட்சை சமயத்தில், மூளை நல்ல நிலையில் இருக்கவேண்டும். குறைவான ஊட்டச்சத்து, பரீட்சை பயம் தந்த இறுக்கம், அடிக்கடி சாப்பிடும் டீ, காபி, பாக்கு.... இவையெல்லாம் குழந்தைகளின் மூளையின் செயல்பாடுகளைக் குலைக்கக்கூடியவை. மூளைக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துகள் குறையும்போது, அதன் விழிப்புத்தன்மை குறைந்து, மந்தமாகிறது.
தகவல்களைப் பதிவுசெய்ய, படிப்பவற்றை நினைவில் நிறுத்த, நினைவில் இருப்பதை மீண்டும் கொண்டு வந்து எழுத... இப்படி எல்லாப் பணிகளுக்கும் மூளைக்குத் தேவையானது குளுகோஸ், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள், எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு, இளம்வயதினருக்கு - அதுவும் தேர்வுக்காலங்களில் அவசியம் தேவை. அவை என்ன எனப் பார்க்கலாமா?

கவனத்தை ஒருமுகப்படுத்த:

முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம், பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவை. பாப்கார்ன், வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷான பழங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.

உஷார்த்தன்மை வர, மனவலிமை பெற, பசியைக் கட்டுப்படுத்த:

இவற்றுக்கு முக்கியத் தேவை புரதம். குழந்தைகள் மிகவும் சோர்வாக, எதிலும் அக்கறை காட்டாதவர்களாக, சோம்பேறிகளாக, மன உளைச்சலோடு காணப்பட்டாலோ அல்லது மிகவும் கவலைப்பட்டு அழும் நிலையில் இருந்தாலோ, மூளைக்குப் புரதம் தேவை என்பது அறிகுறி.

மீன், முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் பருப்பு வகைகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால், தயிர், சீஸ், பருப்பு வகைகள் ஆகியவை புரதச்சத்து நிறைந்தவை. குழந்தைகளுக்கு இவற்றைத் தரலாம்.

மகிழ்ச்சியான மனநிலைக்கு:

பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாஷியம், வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பாதிக்கப்படாதவாறு இந்த ஊட்டச்சத்துகள்தான் பாதுகாக்கின்றன. பரீட்சை சமயத்தில், பழங்களும் காய்கறிகளும் உங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் இடம்பெறுமாறு செய்யுங்கள். வைட்டமின்களையும் தாதுக்களையும் அவை வாரிவழங்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்கு:

முட்டை, ஆல்மண்ட், வால்நட், போன்ற பருப்புகள், மீன், எள், பரங்கிவிதை (இது ஒரு சத்து மிகுந்த நொறுக்குத்தீனி), முழு கோதுமை போன்ற உணவுகள்.

சிந்திக்கும் சக்தி அதிகரிக்க:

தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்கள், ஈஸ்ட், கீரைகள்.

தேர்வு சமயத்தில், உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமான தேவை தண்ணீர்தான். இந்தச் சமயத்தில், உடலில் இருக்கும் தண்ணீர் சத்து அதிகமாக வெளியேறுவதால், அவர்கள் மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ, மிகவும் வெப்பமான இடத்தில் வசிப்பவராகவோ இருந்தால், இன்னும் அதிகமான தண்ணீர் அருந்தவேண்டும்.

காபி, டீ, மென்பானங்களை அடிக்கடி அருந்த அனுமதிக்காதீர்கள். குடித்த மறுநிமிடம் மூளைக்கு புத்துணர்வைத் தருவதுபோல் தோன்றினாலும், அதே வேகத்தில் இவை உடலை தளர்வடையச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பரீட்சை சமயங்களில் அதிகமான சர்க்கரையைத் தவிர்ப்பதும் நல்லது. முதலில் சுறுசுறுப்பைத் தருவது போலிருந்தாலும், சிறிது நேரத்தில் களைப்பை உண்டாக்கி, தூக்கம் வரவழைக்கும். சர்க்கரைக்குப் பதிலாக முடிந்தவரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

போனஸ் டிப்ஸ்:

குழந்தைகளுக்கு "வைட்டமின் சி"-யை அதிகம் சேருங்கள். எலுமிச்சம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளில் "வைட்டமின் சி" கொட்டிக்கிடக்கிறது. மேலும் கொத்தமல்லிச் சட்னி, தக்காளி பழச்சாறு, முழுப்பயறு வகைகளையும் சாப்பிட்டால், மூளைக்கான செல்களுக்கு வேறு பாடிகார்டே தேவையில்லை.

சாப்பாட்டுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பருப்புத் துவையல் அரைத்துக் கொடுங்கள். அதில் வைட்டமின் பி6 உள்ளதே!

காபி, டீ, மென்பானங்களுக்கு பதிலாக பழச்சாறு, இளநீர், கேரட், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்ற காய்கறிகளின் சாறுகள், பானகம் ஆகியவற்றை தரலாம்.

வாழைப்பழம் மிக நல்ல ஸ்நாக்ஸ். அதில் "வைட்டமின் பி6" நிறைந்திருப்பதால், பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் சிந்தனைத்திறனையும் அதிகரிக்கிறது.

உலர்பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றில் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ், புரதம் ஆகியவை மூளைச் செல்களைப் பாதுகாக்கும் கேடயங்கள். அவை அதிகம் உள்ள பாதாம், வால்நட், பருப்புகளையோ, அல்லது எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றையோ தாராளமாகக் கொடுக்கலாம்.

தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். அதனால், உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். இது அவர்களின் மன அழுத்தத்தையும் விரட்டிவிடும்.

பிள்ளைகளின் மூளையை ரீசார்ஜ் செய்ய, நல்ல தூக்கமும் அவசியம். குறைந்தபட்சம் 6-லிருந்து 8 மணி நேரம் அவர்கள் தூங்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும், எந்த வேளை உணவையும் "வேண்டாம்" என ஒதுக்கவிடாதீர்கள். சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் எரிச்சல், கோபம், அழுகை, கவலை, பயம் போன்ற உணர்வுகள் உண்டாகும். குழந்தைகளின் மூளைக்கு, சர்க்கரை (குளுகோஸ்) தொடர்ந்து, சீராகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். என்பதை மறந்துவிடாதீர்கள்.

மூன்று வேளை பலமான உணவு சாப்பிட வைப்பதைவிட, சீரான இடைவெளியில் அவ்வப்போது சிறு சிறு அளவு உணவு உண்பது, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பலமான உணவால், வயிறு கனப்பதுடன், தூக்கம், மந்தநிலை போன்றவை ஏற்படும்.

பரீட்சை நேரம் என்றில்லை. எப்போதுமே அவர்களை பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, டின், அட்டைப் பெட்டி உணவுகள் மற்றும் திடீர் உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை உண்ண அனுமதிக்காதீர்கள். ரசாயனக் கலப்புமிக்க அவைதான், ஆரோக்கியத்தின் முதல் எதிரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக