பூமியில் தோன்றிய அரசர்கள், அறிஞர்கள், தலைவர்கள் அனைவருமே ஒரு நாட்டுக்காக, ஒரு குலத்துக்காக பிறந்து வாழ்ந்து இறக்கின்றனர். அவர்கள் பிறப்பது பற்றிய தகவல் ஏதும் நமக்கு தரப்படுவதில்லை. ஆனால், இயேசு பிறக்க இருப்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். அவரது பிறப்பு முதல் இறப்பு வரை என்னென்ன நடக்கும் என்பதை எடுத்துரைத்தனர். இதுபற்றி பைபிளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அவர்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் நிறைவேறியுள்ளது. ""உயிரோடிருக்கிறவரை, நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுவதென்ன? அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்,'' என பைபிள் வசனம் கூறுகிறது.
உலக வரலாறு பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள். முதல் மனிதனான ஆதாம், கடவுளின் கட்டளையை மீறி செய்த பாவத்தால், ஒட்டுமொத்த மனுக்குலமே பாவ வாழ்க்கையை தொடர்ந்தது. தான் படைத்த மனுக்குலம், தன்னை போல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றே கடவுள் விரும்பினார். மனிதனும், ஒவ்வொரு முறையும் தான் செய்யும் பாவ செயலால் மன வேதனை அடைந்தான். அதற்கு பரிகாரமாக, கடவுளின் மன்னிப்பை பெற விலங்கு, பறவைகளின் ரத்தத்தை கடவுளுக்கு பலியாக செலுத்தினான். ஆனாலும், பாவச்செயல் தொடர்ந்தது. இதில் இருந்து மக்களை விடுவிக்க கடவுள் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் பிறந்தார். யூத மக்கள் மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால், கடவுளின் கட்டளைகளை மீறி வாழ்ந்த யூதர்கள் புதிய கட்டளைகளை வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ள விரும்பாமல் இயேசுவை ஒழித்து கட்ட திட்டம் தீட்டினர். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,'' என பைபிள் தெளிவுபடுத்துகிறது.
ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவவாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது. நமக்கு 'ஈஸ்டர்' உணர்த்தும் தத்துவம் இதுவே.
உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்: இயேசு மரித்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் உடலையும் சிலுவைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் அருகில் வந்தனர். அவர் மரித்துபோயிருந்தார். ஒரு போர்சேவகன் அவரது விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் வெளிப்பட்டது. இதன் பிறகு யோசேப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று, இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதித்தான். இயேசுவின் உடல் அருகே வந்த நிக்கோதேமூன் என்பவன் இயேசுவின் சரீரத்தில் மணம் மிக்க சுகந்தப்பொருட்களைத்தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறைக்குள் இயேசுவின் சரீரத்தை வைத்தனர். கல்லறை வாசலில் பெரிய கல்லைப்புரட்டி வைத்தார்கள். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருள்நீங்காத பொழுதில் ஆண்டவருடைய கல்லறைக்கு மகதலேனா மரியாள் என்பவரும், யாக்கோபின் தாயாகிய மரியாள் சலோமியும் சுகந்த வார்க்கங்களை கொண்டு சென்றனர்.
கல்லறைக் கல்லை எப்படிப்புரட்டுவது என்று அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். கல்லறை அருகே சென்றதும் கல் புரண்டு கிடந்ததைப் பார்த்தனர். "இதை யார் அகற்றியிருக்கக் கூடும்?'' என்றவர்களாய், கல்லறைக்குள் எட்டிப்பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன் பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று, ""யாரோ ஆண்டவரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடத்தில் அவர் இல்லை,'' என்று சொன்னார்கள். இதன்பிறகு மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்றார்கள், அப்போது பிரகாசமுள்ள ஆடையணிந்த இருவரை கண்டார்கள். அந்தப்பெண்கள் நடுக்கமும், திகிலும் அடைந்தவர்களாய் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை "வாழ்க' என்று வாழ்த்தியதுடன், அவர்களை நோக்கி, ""பயப்படாதிருங்கள், நீங்கள் போய் என் சீடர்கள் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்,'' என்றார். இயேசு உயிர்த்தெழுந்த அதேநாளில் இரண்டு பேர் எம்மோவு நகரத்துக்குச் சென்றனர். அவர்களது முகம் துக்ககரமாக இருந்தது. அவர்களை இயேசு பார்த்தார்.""நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ""இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட கல்லறையில் காணவில்லை,'' என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி, ""கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்த பாடுகளையெல்லாம் அடைந்து தீரவேண்டுமல்லவா?'' என்றார்.இறந்த பிறகும் கூட விலா எலும்பில் குத்துப்பட்டவர் இயேசுபிரான். தெய்வீகமான அவர், மக்களை நல்வழிக்கு திருப்ப உயிரையே கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு உணர்த்தினார். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.
ஈரமுள்ள இருதயம் இருக்கட்டும்: இங்கிலாந்தில் ஆலிவர்கிராம்வெல் ராணுவ தளபதியாக இருந்த போது ஒழுக்க விதிமுறைகள் கடுமையாக இருந்தன. ஒருசமயம் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்வீரனை விசாரித்தார் ஆலிவர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ""நாளை மாலை ஆலயமணி அடிக்கும் போது இவன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்,'' என உத்தரவிட்டார். மறுநாள் ஆலிவருடன் அதிகாரிகள், மக்கள் கூடினர். துப்பாக்கியுடன் ஒருவன் வீரனின் தலையை குறி வைத்தான். அனைவரும் மணிச்சத்தத்திற்காக காத்திருந்தனர். தண்டனை நேரம் கடந்துவிட்டது. மணி அடிக்கவே இல்லை. அப்போது, ஒரு பெண் கை எலும்பு நொறுங்கி ரத்தம் வழிய வந்தாள். அவள் ஆலிவரிடம், ""பிரபு, குற்றம் சாட்டப்பட்ட இவருக்கும், எனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவருக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டதும் நேற்றே மணிக்கூண்டில் ஏறி, மணியின் இரும்பு நாக்கைப் பிடித்துக் கொண்டேன். மணி அடித்தவர் வேகமாக கயிறை இழுத்தார். நான் கையால் மணியின் நாக்கை பிடித்திருந்ததால் நாக்கு மணியின் மீது படவில்லை. மாறாக கயிறை இழுத்த வேகத்தில் என் கை முறிந்தது. மணியடிப்பவனுக்கு காது கேட்காது என்பது தங்களுக்கு தெரியும். அவன் மணியடித்துவிட்டதாக எண்ணி போய்விட்டான். இவரை எனக்காக விடுவியுங்கள்,'' என்றாள். ஆலிவரின் மனதில் கூட ஈரம் பொங்கியது. அந்த வீரனை விடுவித்தார். கர்த்தரும் இப்படித்தான், நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் அடைந்த தழும்புகளால் நாம் குணமானோம். அவர் மரித்து நம்மை காத்தார். அவரை ஈஸ்டர் மட்டுமல்ல, எந்நாளும் நினைவு கொள்வோம்.
2426 மொழிகளில் எழுதப்பட்ட நூல்: கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட வரலாறும், அவர் பிறந்த பின் உலகம் முடியும் வரை உள்ள நிகழ்வுகளும் பைபிளில் உள்ளது. ஆதாம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் படைப்பும், இயேசுவின் பிறப்பும் அதில் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2426 மொழிகளில் உள்ள ஒரே நூல் பைபிள் மட்டுமே. பைபிளை பற்றிய இன்னும் ருசிகரமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!
* ஜெர்மனியில், விஞ்ஞானி ஜான் குட்டன்பர்க் கி.பி.,1450ல் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். அதில் முதல் நூலாக பைபிளை அச்சிட்டார்.
* கி.மு.,1500 முதல் கி.பி.,55 வரை, 40க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் அந்தந்த கால நிகழ்வுகளாக எழுதிய கடவுள் வார்த்தையாக பைபிள் நம்பப்படுகிறது.
* முதன்முதலாக எழுதப்பட்ட பைபிளின் பிரதி ஒன்று, அமெரிக்கா நியூயார்க் நகரிலுள்ள பொது இறையியல் கல்லூரியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
* இத்தாலி, வாடிகன் நகரில், தோல் சுருளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு பைபிளம் உள்ளது. ஒரு சுருள் 30 அடி நீளம் கொண்டது. இதுபோல 43 தோல் சுருள்களில் அது எழுதப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை தோல்கள் பயன்படுத்தப்பட்டன.
* இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். ஜெர்மனி போதகர் சீகன்பால், தஞ்சாவூர் அருகே தரங்கம்பாடி வந்து தங்கினார். கி.பி.,1705ல், எபிரேய மொழியிலிருந்து, தமிழில் பைபிளை மொழி பெயர்க்க துவங்கி 1714ல் முடித்தார். அவர் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு பைபிள் ரோமிலுள்ள வாடிகன் நகரில் உள்ளது.